Sunday, April 8, 2018

பெட்ரோ பராமோ-யுவான் ருல்போ



யுவான் பிரீஷியாடோ எனும் கதாபாத்திரத்தின் வழியே யுவான் ருல்ஃபோ நாவலுக்குள் பயணம் செய்கிறார். நம்மை மெக்ஸிகோ தேசத்தின் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் அலைக்கழித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு புதிய வகைப் பிரயாணமாகவே இருந்தது எனக்கு. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொண்டு பிரயாணிப்பது பெரும் சவால் நிறைந்தது.

பெட்ரோ பரமோவின் கதை சுருக்கம் இதுதான். தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்தை காப்பதற்காக தாயின் இறப்புக்குப் பிறகு தந்தையைத் தேடி தனது சொந்த ஊரான கோமாலாவுக்கு வருகிறார் யுவான் பிரீஷியாடோ. அது இறந்தகாலத்தின் நகரம். அத்தனை துயரங்களையும் அது தேக்கி வைத்திருக்கிறது.

மதத்தின் பெயரால் அரசமைக்கும் அரசு மக்களுக்கு பேரழிவினைத் தந்தே தீரும். அது மக்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க விரும்பும். கிறித்துவப் பாதிரிகளின் கொடும் நெஞ்சத்தின் இன்னொரு பக்கத்தினை பறைசாற்றுகிறது. அவர்களின் ஆலோசனைகளின்படி ஆயுதமேந்திய படைகள் நாத்திக அரசுக்கெதிராக செயல்பட்டதையும் மக்களை கொன்றழித்ததையும் சொல்லி செல்கிறது. மெக்சிகோவில் 1926-29 களில் நடைபெற்ற கிறிஸ்டெரோக்களின் கலவரத்தில் யுவான் தந்தையை இழக்கிறார். பிறகு ஆறாண்டுகளில் தாயையும் இழக்கிறார். யுவான் இங்கிருந்துதான் தன் தந்தையைத் தேடிப் பயணிக்கிறார்.

எஸ்.பாலச்சந்திரன் அவர்களது மொழிபெயர்ப்பு போற்றுதலுக்குரியது. தடங்கலற்ற சிறப்பான மொழிபெயர்ப்பு.

நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் என பெரம்பலூர் நூலகத்திலிருந்து எனக்காக எடுத்துவந்து கொடுத்த சிறந்த வாசிப்பாளர் திருமிகு மார்க்கண்டன் முத்துசாமி அய்யா அவர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:19
தலைப்பு: பெட்ரோ பராமோ
ஆசிரியர்: யுவான் ருல்ஃபோ (தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்)
வெளியீடு: விடியல் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 144
விலை: ₹55

No comments:

Post a Comment