Saturday, April 21, 2018

ஈட்டி- குமார் அம்பாயிரம்

சரியலிசம், மாய எதார்த்தம், பின்னை நவீனத்துவம் போன்ற வடிவங்களில் கதை சொல்லும் புதுமையை தன் சிறுகதைகளின் வாயிலாக நிரூபித்துள்ளார் குமார் அம்பாயிரம் அவர்கள். "ஈட்டி" ஒவ்வொரு விஷயங்களையும் மெல்ல வருடுவதுபோல் சதக்கென குத்திவிடுகிறது. ஈட்டி குறி தவறாது எய்யப்பட்டிருப்பதை மொத்தக் கதைகளையும் வாசித்து முடித்த பிறகு உணரமுடியும். உணர்ந்தேன்.

ஒவ்வொரு கதைக்குள்ளும் பல பாத்திரங்களை உரையாடவிட்டு சோழி உருட்டும் ஒரு மாயவித்தைக்காரனாக வலம் வருகிறார். அஃறிணை எல்லாம் உயர்திணையாகவும், உயர்திணைகள் எல்லாம் அஃறிணையாகவும் கதையெங்கும் ஊடுபாவுகிறது. வரிக்கு வரி கவிதைகளாலே கதை சொல்லுவது போன்ற பிரமை தோன்றுவது தவிர்க்கவியலாத ஒன்று.

ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு சமூகத்தின் பிரச்சினைகள் எதிரொலிப்பதை நீங்கள் புரிந்துகொள்ள இயலும். புணர்ச்சியின் இயக்கவியலை இலைமறை காயாக ஒவ்வொரு கதையிலும் நிகழ்த்திகாட்டுகிறார். அதேபோல் மாய உலகிற்கும் எம்மை அழைத்துச் செல்கிறார். விந்தையான மனிதர்களை, அவர்களின் செய்கைகளை பின்னை நவீனத்துவ பாணியில் கதைகளாக்கியுள்ளார்.

ஆவிகளை ஆவி என அழைக்காமல் அவற்றுக்கு ஒரு பொதுவான பெயராக "ன்யாக்" என பெயரிட்டு உரையாடுவதும், காக்கைகளின் புணர்ச்சியை பார்த்ததால் சாபம் பெற்றவன் காக்கைகள் வெறும் காக்கைகளா அல்லது பித்ருக்களா என ஐய்யப்பட்டு கோபத்தில் காக்கைகளை கொத்துக்கொத்தாக கொன்றழிப்பதன் விளைவால் நிகழும் சூழல் மாற்றங்களும், பாதிப்புகளும், காக்கை இல்லாத வெறுமை சூழ்ந்த உலகமும், பிண்டம் வைபோரின் இழப்புகளையும் விவரித்துச் செல்கிறது "க்காக்கா" எனும் கதை. ஈட்டி கதையில் நண்பன் தன் பழைய வாழ்வுக்கு மீள்வதை ஒற்றைச் சொல்லின் வாயிலாக புரிய வைக்கிறார். "மண்யோனி" முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டிய புரிதலை தந்திருக்கிறது. "தேடூ", "வழக்கு எண்235/2020 போன்ற கதைகள் ஒத்த வடிவம் பெறுபவையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் கதையாளன் தன் ஆதி முகத்தை, ஆதி வாழ்வை, ஆதி பழக்கவழக்கங்களை தன்னோடு சுமந்தைலைபவனாக காணப்படுகிறான். நாகரீக உலகில் வாழ்ந்தாலும் மனதின் ஆழத்தில் ஆதியின் பிம்பம் படிந்ததின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். இது நமது ஒவ்வொருவர் மரபணுவிலும் படிந்திருக்கலாம் என்பதை மறுக்கத்தான் முடியுமா? வாசித்துப் பாருங்கள் புதிய அனுபவம் ஒன்றைத் பெறுவீர்கள் என்பதை அந்த தொல்மக்கள் மேல் ஆணையாக சொல்கிறேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 26
தலைப்பு: ஈட்டி (சிறுகதைகள்)
ஆசிரியர்: குமார் அம்பாயிரம்
வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹70

6 comments:

  1. "ஈட்டி" நூலை வாசிக்கத் தூண்டும் பதிவு இது.

    ReplyDelete
    Replies
    1. வாசித்துப் பாருங்கள் புதிய அனுபவம் கிடைக்கும்...

      Delete
  2. வாசித்துப் பாருங்கள், புதிய அனுபவம் பெறுவீர்கள் என்ற சொற்றொடர் நூலை எப்படியும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அஃறினையெல்லாம் உயர்தினையாகவும், உயர்தினைகள் எல்லாம் அஃறினையாகவும் (அஃறிணை.. உயர்திணை என்றிருக்கவேண்டுமல்லவா?)

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா. திருத்திக் கொள்கிறேன்.

      Delete
  3. ஈட்டி பற்றிய சுவையான விமரிசனம்...

    ReplyDelete