Wednesday, November 8, 2017

முத்தன் பள்ளம்

எத்தகைய பெரிய ஆண்ட சமூகமாக இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களின் இருப்பை சமூக பொருளாதார அரசியலே தீர்மா னிக்கிறது.

ஒரு நவீன விளையாட்டின் மூலமாக அறியப்படாத ஓர் இருப்பிடத்தை தேடி செல்வதும், அதைக் கண்டடைந்த பின்னால் மனம் கனத்துப் போவதுமாக நாவல் முற்றுப் பெறுகிறது.முத்தன் பள்ளம் வாசித்து முடிக்கையில் மனதுக்குள் பெரும் பள்ளம் விழுவதையும் அங்கே கண்ணீர் தேங்குவதையும் உணர முடியும்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொட்டு, முத்தரையர் சமூகத்தின் வாழ்வியலையும், அதில் ஒரு பிரிவார் (பாட்டன் வழித்தோன்றல்கள்) இந்த நவீன யுகத்தில் படும் அவஸ்தை என போக்கிமான் பூச்சியின் பயணத்தில் கதையை உருவாக்கியதில் புதிய கதை சொல்லல் முறை புலப்படுகிறது. ஓரிடம் தவிர்த்து மற்ற இடங்களில் வரலாற்றுச் சம்பவங்களை விழிக்கும் பொருட்டு அந்த காலத்தினை (ஆண்டுகளை) துல்லியமாக அல்லது தோராயமாக பதிவு செய்தல் அவசியமான ஒன்றாகும். இது புதுகை வரலாறு அறிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வர். புதிய வாசிப்பாளர்களுக்கும் அறியாதவர்களுக்கும் குழப்பமான வாசிப்பில் அயர்ச்சியை உருவாக்கும்.

முத்தனுக்கும் முத்தாயிக்குமான உறவு என்பது சடுதியில் தொடங்குவதும், முன் பின் அறிமுகம் இல்லாத முத்தனோடு ஒரு இரவில் கலவியில் ஈடுபடுதல் போன்ற காட்சிகள் சினிமாத்தனமான இருப்பது நெருடுகிறது. இன்னும் இந்த பகுதியில் கவனம் செலுத்தியிருந்தால் புனைவு வீரியம் பெற்றிருக்கும்.

மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் காதலும், வெளிநாட்டுக் காதலியை இழக்க விரும்பாமல் பட்டம் பதவிகளை துறத்தலும், காங்கிரசாரைப் பார்த்து மன்னன் சொல்லும் அந்த வரிகள் சிறப்பு.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முத்தன் பள்ளம் ஒரு சமூகத்தின் ஆவணமாக இல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாக இருந்திருக்கும் என்பது எனது பார்வை. அரசின் கவனத்திற்கு முத்தன் பள்ளத்தின் அவலத்தை நகர்த்தி விடிவை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்கான முதல்படியை தன் வரலாற்றுப் புதினத்தின் வாயிலாக எடுத்து வைத்திருக்கும் தோழர் அண்டனூர் சுராவுக்கு வாழ்த்துக்கள்.


ஆசிரியர் : அண்டனூர் சுரா

பதிப்பகம் : மேன்மை

விலை : ₹150

Tuesday, March 28, 2017

தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.


தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.

இடம்: வேலூர்
நாள்: 26/03/2017

மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடுகளிலும் சீலை மறைப்புகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத்து ஏதிலியர்கள் மத்தியில் பல திறமையாளர்கள் இருந்தும் இலக்கியப் பொதுவெளியில் அவர்களுக்கான இடம் இதுநாள்வரை வெற்றிடமாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்கும் விதமாக 26.03.2017 அன்று வேலூர் மாநகரத்தில் 5 மாவட்ட முகாம்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுத்தின்மீது ஆர்வம்கொண்ட 30 பேரை ஒருங்கிணைத்து பயிலரங்கு ஒன்றினை நடாத்தி புத்தொளி பாய்ச்சியிருக்கிறார்கள்.

இதில் முதல் கட்டமாக சிறுகதை மற்றும் கவிதைகளை எவ்வாறு உருவாக்குவது, உருவாக்கிய படைப்புகளை எவ்வாறு பொதுவெளியில் முன்வைப்பது போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் திரு.ஜி.முருகன் அவர்கள் சிறுகதை உருவாக்கம் பற்றி மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது சிறுகதைகளில் சிறு உயிரினங்களும் முக்கிய அங்கம் வசிக்கின்றன. ஒரு கதையை எழுதி முடித்ததும் அது சரியான வடிவத்துக்கு வரும்வரை திரும்பத் திரும்ப வாசித்து சரிசெய்ய வேண்டும் என்றார்.நீங்கள் சொல்ல வரும் விஷத்துக்குள் அதீதமான புனைவுகளை உள்நுழைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதோடு நேர்மையோடு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளரும் கவிஞருமான திரு அகரமுதல்வன் அவர்கள் கவிதை உருவாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை முன்வைத்து பேசுகையில் இத்தனை ஆண்டுகால முகாம் வாழ்வில் ஒரு படைப்பாளியைக்கூட உருவாக்க இயலாமல் போனது நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றார். யூத மக்களை கொன்றழித்த அவலத்தை, அதுதொடர்பான வரலாற்றை பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு எழுதியது 14 வயதே ஆன ஒரு சிறுமி. நமக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அகதிதானே தவிர அடிமைகள் இல்லை.ஒவ்வொருவரும் இலக்கியத்தினூடாக நமது வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளர் திரு பத்தினாதன் அவர்கள் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகின்ற முகாம் படைப்பாளி. 1990 முதல் 1999 வரையில் மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித்தவர். அகதிகள் தொடர்பான இரு நூல்களை எழுதியுள்ளார். இன்றைக்கு பொதுவெளியில் அகதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். அகதிச் சமூகத்தில் நிகழும் அவலங்களை நாம் இலக்கியங்களினூடாக பிறரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

இலக்கிய வெளியில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலிகளின் நிலை குறித்து முகாம் படைப்பாளர்கள், கவிஞர்கள் சு.சிவா, சுகன்யா ஞானசூரி, நடராஜா சரவணன், சரோகராஜ் மற்றும் செந்தூரன் போன்றவர்கள் முகாம்களில் படைப்பாளர்கள் இல்லை என்பதை மறுத்தார்கள். இருக்கிறார்கள், அவர்களை அடையாளப்படுத்த தவறிவிட்டார்கள். அவர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதற்கான தளம் அப்போது கிடைக்கவில்லை, முகாம்களில் இருந்துகொண்டே சு.சிவா, சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியீடு செய்திருக்கிறார்கள், சிற்றிதழ் (வேர் விடும் நம்பிக்கை) நடத்தியிருக்கிறார்கள், இப்படி திறமையானவர்கள் ஒவ்வொரு முகாமில் கண்டடைய முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இப்பொழுது  எம்மிடத்தில் இருக்கிறது. அதற்க்கு புதிதாக எழுத வருபவர்கள் செய்ய வேண்டியது படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியங்கள் குறித்த வாசிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டும், முகாம்களில் உள்ள நூலகங்கள் பராமரிக்கப்பட வேண்டும், ஒன்றுகூடி விவாதிப்பதை விரிவுபடுத்த வேண்டும், அரசியல் இலக்கியங்களையும் தேடி வாசிக்க வேண்டும், நமது பண்பாடுகள் தொன்மங்கள் குறித்து அறிந்து எழுத வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு செய்திருந்த JRS திருச்சபையின் பணியாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் இந்த நிகழ்வோடு இது முடியாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் ரூபாய் 500 க்கும் அதிக மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. புலம்பெயர் இலக்கியத்தில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலியர் இலக்கியமும் முக்கிய அங்கம் வகிக்கும் என்னும் நம்பிக்கை துளிர்திருக்கிறது.

நிகழ்வு தொகுப்பு
சுகன்யா ஞானசூரி
28/03/2017

Sunday, January 15, 2017

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

பத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.
எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)

எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)

அகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

வாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.
முனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.

வாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

- சுகன்யா ஞானசூரி
15/01/2017

Sunday, January 1, 2017

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க


"சக மனிதர்களின் குறைகளைப் பேசாமல் நம்முடைய நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்."(வி.சி.வில்வம்).

ஒரு சாமானிய நாயகனின் பெயர் சரவணன், நாயகியின் பெயர் கோமதி. நாயகன் பெரியாரிய சிந்தனையாளர். நூல்கள் மீது தீராக் காதலன். நாயகி பிறக்கும்போது சில இருதய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர். தொடர் சிகிச்சைகள் பெற்றும் சரியாகவில்லையென கைவிடப்படுகிறார்.

நாயகன் நாயகி நிலையறிந்து உதவ முன்வந்து திருச்சி, மதுரை, சென்னையென பல ஊர்களின் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார். இப்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஊர் ஊராகச் சுற்றுவதாக ஊராரும் உறவுகளும் தவறாக எண்ணி பிரச்சினை செய்கிறார்கள். (நம் சமூகம் அப்படித்தானே...அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை காண்பதில்தான் ஆர்வமாக இருப்பர்...தன் முதுகில் இருக்கும் அழுக்கினை சரிசெய்வதேயில்லை.) இங்கு நிற்க.

என் விசயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். புது வருசத்தின் முதல் நாளில் புத்தக வாசிப்போடு துவங்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்படிதான் ஒரு நூலை இன்று வாசிக்கத் துவங்கினேன்...நல்லதொரு துவக்கமாக அமைந்துவிட்டது. ஒரு கட்டுரை மட்டுமே இப்போது வாசித்து முடித்தேன். இன்னும் 29 கட்டுரைகள் இருக்கிறது இந்நூலில். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியீடு கண்ட நூலை நான்கு நாட்களுக்கு முன்னர் என் ஆய்வகத்திற்கு நேரில் வந்து தந்துவிட்டுச் சென்றார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் யார்? என்ன நூல்? என்பதினை இறுதியில் அறியத் தருகிறேன். "தலைசிறந்த மனிதநேயம்" எனும் முதல் கட்டுரை என்னை இப்படி எழுதத் தூண்டியது. எங்க கிளம்பிட்டீங்க? இருங்க கதைக்கு வருகிறேன் வாங்க... 

சரி, இப்படி சமூகம் தவறாக பேசவும் உடல்நலம் குன்றியிருந்த நாயகி மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்பவோ அப்பவோ என இறுதி நாளினை எண்ணியிருப்பவரை திருமணம் செய்வதா எனும் பெற்றோர் மற்றும் உறவுகளின் வசவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்துவிடுகிறார்.

இருபதாண்டு திருமண வாழ்வினை 26.04.2008 அன்றோடு முடித்துக்கொண்டு விடைபெற்றார். உடலுறவு கொள்வதற்கான உடல் வலிமை இன்மையால் குழந்தைகளும் இல்லை அவர்களுக்கு. புத்தகங்களோடும், காலன் அழைத்துச் சென்றவரின் நினைவுகளோடும் திருச்சி கே.கே நகரில் வாழ்ந்து வருகிறார் திருமணத்தின்மீது நாட்டமற்ற நாயகன் சரவணன் எனும் தோழர் தி.மா.சரவணன் அவர்கள்.

சரி, நூல் பற்றியும் ஆசிரியர் பற்றிய விபரம் அறியலாம் வருக...

நூல்: கிளம்பிட்டாங்கய்யா....கிளம்பிட்டாங்க

ஆசிரியர்: வி.சி.வில்வம்
(இவர் கியூபாவின் மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மீது கொண்ட ஈர்ப்பால் தன் மகளுக்கு கியூபா என பெயர் சூட்டியதோடு நில்லாமல் பெயர் சூட்டியது குறித்து பிடலுக்கு மடல் ஒன்றும் அனுப்பினார். பிடலும் பதில் மடல் ஒன்றினை அனுப்பி பெருமைப்படுத்தினார். புதுக்கோட்டையில் 2015 இல் நடாத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பில்தான் நான் ஆசிரியரை முதலில் சந்தித்து உரையாடினேன்.)
நூல் வகை: கட்டுரை
விலை: ரூ. 100/-
பதிப்பகம்: கியூபா பதிப்பகம், 41, சுருளி கோயில் 3வது தெரு, திருவெறும்பூர்,
 திருச்சி-620 013. பேச- 98424 87645.

தொடரும்...