Saturday, October 24, 2015

கவிதைகள்-1



1.
நெடுஞ்சாலைப் பயணமொன்றில்
சன்னலோர இருக்கை.
கண்ணுக் கெட்டும்
தூரம் எங்கும்
வானாந்தர வெளியாகி
மன வெளியெங்கும்
வெப்பம் தகித்தது!
ஊராட்சி, பேரூராட்சி,
நகராட்சி, மாநகராட்சி
அன்புடன் வரவேற்பதாக
இழித்துக் கொண்டிருக்கிறது
பாதியுடைந்த பற்களென!
பச்சயம் தொலைத்த
வானாந்தர வெளியை
பார்க்கச் சகியாமல்
சன்னலை மூடிவிட்டு
கண்களை மூடி
ஒலிக்கும் பாடலுக்குள்
பசுமையைத் தேடி
பயணித்த கணங்களில்
எங்கிருந்தோ
மெலிதாய் வீசியது
மல்லிகையின் வாசம்!
---------------------------------
2.
புத்தம்
புதுப் பூவென
காலையில் மலர்ந்தும்
வாடிய பூவென
மாலையில் வதங்கியும்
பணிக்குச்
சென்று வருவதும்!
வாசனைத்
திரவியங்கள் பூண்டு
இரவுக் கேளிக்கையில்
ஆல்கஹாலோடு
ஆண்வாடை சுமந்து
அதிகாலையும்
அந்தி மாலையென
அறைக்குள்
அமிழ்ந்து கிடக்கும்
நகரத்துப் பெண்ணென
இருவேறு முகங்கொண்டு
மாநகரம்
நாட்களை நகர்த்துகிறது!
************************************
3.
அதோ
விக்ஸ் மரங்கள்
வெட்டப் படுகின்றது....
முந்திரி மரங்களும்
முறிந்து கிடக்கிறது....
சவுக்குத் தோப்புகளும்
வேலிகளும் காவல்களுமாய்....
கதிரவன்
மேற்கில் வீழும்வரை
காத்திருந்தோம்! - இனி
நிலவுகள் எழாத
அடர்ந்த இருளையே
வேண்டியிருப்போம்!
அடங்கக் கற்றுக்கொண்ட - நாம்
அடக்கவும் கற்றுக்கொண்டோம்
அடி வயிற்றுக்குள்
எழும் பிரளயங்களை!
இப்போது எமது
அவசர தேவை - அரசின்
காப்பீட்டுத் திட்டமல்ல
கழிவறைகளே!
அகதிகள்
முகாம் எல்லாம்
அவஸ்தைகளின் கூடாரமே!
*************************************
4.
பூவரசம் பீப்பியில்
இசை கற்றோம்!
தென்னங் குருத்தில்
தோரணம் செய்தோம்!
பனங் குருத்துப் - பிலாவில்
கூழ் சுவைத்தோம்!
குரும்பைகள் கொண்டு
தேர் செய்தோம்!
அன்னைத் தமிழை
உயிராய் சுவாசித்தோம்!
இப்படி எல்லாவற்றையும்
தாய்மண்ணில் கற்றுக்கொண்ட - நாம்
எங்கிருந்து கற்றோம்
புலப்பெயர்வை?
*************************************
5.
அமெரிக்காவிலிருந்து
வருவார்கள்......
ஐரோப்பாவிலிருந்து
வருவார்கள்......
இன்னும்பல நாடுகளிலிருந்தும் வருவார்கள்......
கதைப்பார்கள்.....
கட்டியணைப்பார்கள்......
புகைப்படமெடுப்பார்கள்.....
காலச் சக்கரம்
சுழன்று கொண்டேயிருக்கிறது...
காட்சிகள் மட்டும்
மாறவேயில்லை!
நாம்
இவர்களிடம் கேட்பதெல்லாம்
சுதந்திர
தமிழீழம் மட்டுமேயன்றி
அகதி முகாம்களின் - இந்த
அவலக் காட்சிகளையல்ல!

- சுகன்யா ஞானசூரி.

1 comment:

  1. ஒவ்வொரு வரியுலும் இன்றைய அடக்குமுறை அவலமுறை அனைத்தும்! அருமையான கவிதை நண்பரே!

    ReplyDelete